தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். கோட்டை முதல் குமரி வரை தற்போது தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக உள்ளதாகத் தெரிவித்த அவர், மார்ச் 10-ஆம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்றும் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே தேமுதிகவின் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்றும், அது தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில் ஒரு அதிரடியான முடிவாக இருக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். தற்போது தேமுதிக சார்பில் விருப்ப மனுக்கள் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரேமலதாவின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
