சென்னையில் இன்று தங்கம் விலை கடும் ஊசலாட்டத்தைச் சந்தித்து வரும் நிலையில், காலையில் குறைந்த விலை மாலையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, நேற்று மற்றும் இன்று காலை வரை கணிசமாகக் குறைந்திருந்தது. குறிப்பாக இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் 1,600 ரூபாய் குறைந்து 1,12,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 14,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த சரிவு நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதியை அளித்த நிலையில், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
தற்போது மாலை நேர நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கித் திரும்பியுள்ளது. சவரனுக்கு ஒரேடியாக 1,040 ரூபாய் உயர்ந்து, தற்போது ஒரு சவரன் தங்கம் 1,14,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் விலை 130 ரூபாய் அதிகரித்து 14,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காலையில் குறைந்த விலை மாலையிலேயே மீண்டும் ஆயிரக்கணக்கில் உயர்ந்திருப்பது, தங்கம் விலை இனி குறையுமா அல்லது மேலும் உச்சத்தைத் தொடுமா என்ற அச்சத்தை இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
