தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் தனது முழுவீச்சிலான தேர்தல் பரப்புரையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒரு மாபெரும் மாநில மாநாடு மற்றும் மூன்று மண்டல அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்தத் தவெக தரப்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. திருச்சியைச் சேர்ந்த தவெக ஆதரவாளர் ஒருவர், தனது மளிகைக் கடையின் ரசீதில் “2026-ல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்போம்” என்ற வாசகத்தைப் பொறித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார். கட்சி மீதான தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்தும் நோக்கில் அவர் செய்துள்ள இந்த நூதனமான தேர்தல் விளம்பரம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
விஜய் தனது ‘உங்க விஜய், நான் வரேன்’ என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, ஏற்கனவே திருச்சியில் வெற்றிகரமான பரப்புரையை மேற்கொண்டிருந்தார். வரும் பிப்ரவரி 2-ம் தேதி கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்குத் தமிழக அரசு விதித்துள்ள கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) எதிர்த்து தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பிப்ரவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், விஜய்யின் அடுத்தகட்ட மக்கள் சந்திப்புத் திட்டங்களுக்கு இது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
