உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்’ (Reels) செய்த போது ஏற்பட்ட விபத்தில் 22 வயது இளைஞர் முகமது ஃபைசான் பரிதாபமாக உயிரிழந்தார். பிஜௌரியா ரயில் நிலையம் அருகே கட்டுமானத்தில் உள்ள மேம்பாலத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிகையலங்கார நிபுணரான ஃபைசான், தனது நண்பருடன் அங்கு சென்றபோது, ஒரு சிமெண்ட் சிலாப்பின் (Cement Slab) மீது ஏறி போஸ் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி கீழே விழுந்த அவர் மீது, மேலே இருந்த கனமான சிமெண்ட் கல் நழுவி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆறு உடன்பிறப்புகளில் ஒருவரான ஃபைசானின் இந்த அகால மரணம் அவரது குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. விபத்து குறித்துத் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், ஆனால் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை எடுக்கவோ அல்லது பிரேதப் பரிசோதனை செய்யவோ விரும்பாததால், உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சமூக வலைதள மோகத்தால் இளைஞர்கள் ஆபத்தான இடங்களில் ரீல்ஸ் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
