தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இடையே கூட்டணி அமைவது குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வந்த ராமதாஸ் தரப்பு, இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், திமுக தலைமை மிகக் குறைந்த இடங்களையே ஒதுக்க முன்வந்ததால் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திமுகவுடனான கூட்டணி வாய்ப்பு மங்கியதை அடுத்து, ராமதாஸ் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாக தவெகவை நோக்கித் திரும்பியுள்ளார்.
சமீபத்தில் பாமக இரண்டாகப் பிளவுபட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்து 15 தொகுதிகளை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் போட்டியாக, ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் திமுக கூட்டணியில் களம் காண ஜெகத்ரட்சகன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், திமுகவின் “கதவு மூடிய” நிலையில், வட மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கவும், அதிக தொகுதிகளில் போட்டியிடவும் தவெகவுடன் கூட்டணி அமைப்பதே சரியான முடிவாக இருக்கும் என ராமதாஸ் தரப்பு கருதுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன், ராமதாஸ் தரப்புடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதை உறுதி செய்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தகவல் தற்போதுதான் கிடைத்துள்ளதாகவும், கூட்டணி அமைந்தால் அது நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் நேர்மறையான கருத்தைப் பகிர்ந்துள்ளார். தவெக கூட்டணியில் இணைந்தால் குறைந்தது 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிட ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த திடீர் அரசியல் மாற்றம் தமிழகத் தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த ராமதாஸ், திடீரென அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருப்பது அவர் கூட்டணியை மாற்றத் தயாராகிவிட்டதையே காட்டுகிறது. ஒருபுறம் அன்புமணி அதிமுகவுடனும், மறுபுறம் ராமதாஸ் தவெகவுடனும் கைகோர்க்கும் சூழல் உருவாவதால், வரவிருக்கும் தேர்தலில் வாக்குகளைப் பிரிப்பதிலும், புதிய கூட்டணிகளை உருவாக்குவதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கும்.
