டெல்லியில் இருந்து அழுத்தமா…? தினகரன் முடிவின் ரகசியம் என்ன…? திமுகவில் இணைந்த மாணிக்கராஜாவின் பகீர் பேட்டி…!

By Devi Ramu on தை 23, 2026

Spread the love

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா, அக்கட்சியிலிருந்து விலகி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். டிடிவி தினகரன் நிர்வாகிகளின் ஆலோசனையைப் பெறாமல் தன்னிச்சையாக பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்ததே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவருடன் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று முக்கிய மாவட்டச் செயலாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமாகினர். 8 ஆண்டுகால உழைப்பை வீணடித்து, மீண்டும் அதிமுகவுடன் கைகோர்ப்பது கட்சிக்கு ஆபத்தாக முடியும் என எச்சரித்தும் தலைமை கேட்கவில்லை என மாணிக்கராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். தினகரனின் இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் டெல்லியின் அழுத்தம் இருக்கலாம் என்றும், அது பெரிய மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

   

அமமுக உருவாக்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் வகையில் தலைமையின் செயல்பாடுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இனி ஜனநாயக முறையில் ஆட்சி நடத்தும் திமுகவைப் பின்தொடரப் போவதாக அறிவித்தார். முன்னதாக, மாணிக்கராஜாவைக் கட்சியிலிருந்து நீக்குவதாகத் தினகரன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறுவது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.