“நீ 5 கொலை, நான் 1 கொலை”… கம்பிகளுக்கு பின்னால் பூத்த பயங்கர காதல்…. திருமணத்திற்காக பரோலில் வரும் ‘டெட்ப்லி ஓவர்’ ஜோடி….!

By Nanthini on தை 23, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநில சிறைச்சாலையில் தண்டனை பெற்று வரும் இரண்டு கொலைக் குற்றவாளிகள் காதல் வயப்பட்டு, தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டேட்டிங் செயலி மூலம் இளைஞரை ஏமாற்றி, கடத்திக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மாடல் அழகி பிரியா சேத் மற்றும் தனது காதலியின் குடும்பத்தையே கொடூரமாகக் கொலை செய்த அனுமன் பிரசாத் ஆகிய இருவருமே இந்த வினோத திருமணத்தின் மணமக்கள் ஆவர். இவர்களின் காதலுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை அடுத்து, இவர்கள் இருவரும் தற்போது பரோலில் வெளிவந்துள்ளனர்.

பிரியா சேத் கடந்த 2018-ஆம் ஆண்டு டிண்டர் செயலி மூலம் துஷ்யந்த் சர்மா என்பவரைத் தொடர்பு கொண்டு, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி பணம் பறிக்க முயன்றார். அடையாளம் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் துஷ்யந்தை கொடூரமாகக் கொலை செய்து உடலைச் சூட்கேசில் அடைத்து வீசியதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மறுபுறம், அனுமன் பிரசாத் தனது காதலியின் பேச்சைக் கேட்டு, அவளுடைய கணவன் மற்றும் நான்கு குழந்தைகளை ஒரே இரவில் கொன்று குவித்த மிகக் கொடூரமான குற்றவாளி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திறந்தவெளி சிறைச்சாலையில் சந்தித்தபோது காதல் மலர்ந்துள்ளது.

   

திரைப்படக் கதையையே விஞ்சும் வகையில் அமைந்துள்ள இவர்களின் திருமணத்திற்கு நீதிமன்றம் 15 நாட்கள் அவசரக்கால பரோல் வழங்கியுள்ளது. ஆல்வார் மாவட்டத்தின் பரோடமேவ் பகுதியில் இவர்களது திருமணம் இன்று நடைபெற உள்ள நிலையில், இத்தகைய கொடூரமான குற்றவாளிகளுக்குப் பரோல் மற்றும் திருமண அனுமதி வழங்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. சிறைச்சாலையில் பூத்த இந்தக் காதல் தற்போது திருமணத்தில் முடிவது சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.