கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள லக்குந்தி கிராமத்தில், பழைய வீட்டை இடித்துவிட்டு அஸ்திவாரம் தோண்டியபோது பூமிக்கடியில் ஒரு செப்புப் பானை கண்டெடுக்கப்பட்டது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் பிரஜ்வல் ரித்தி அந்தப் பானையை மீட்டுப் பார்த்தபோது, உள்ளே ஏராளமான தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதில் வளையல்கள், சங்கிலிகள், மோதிரங்கள் உள்ளிட்ட சுமார் 470 கிராம் எடையுள்ள 22 பழங்கால தங்க ஆபரணங்கள் இருந்தன.
புதையல் கிடைத்த விவரத்தை மறைக்காமல் அந்த மாணவன் நேர்மையுடன் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் தாசில்தார், நகைகளைக் கைப்பற்றி ஆய்வுக்காகத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தச் செப்புப் பானையின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது, இவை பல நூற்றாண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரிய புதையலை ஒப்படைத்த மாணவனின் நேர்மையை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
