திருப்பூர் மாநகராட்சி பூ மார்க்கெட் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், லட்சுமி என்ற தூய்மைப் பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக நிர்வாகியும் வியாபாரிகள் சங்கத் தலைவருமான நல்லசாமி, தனது கடையின் கழிவுகளை நடைபாதையில் கொட்டியுள்ளார்.
இதைக் கண்டித்த தூய்மைப் பணியாளர்கள், குப்பைகளை உரிய இடத்தில் தரம் பிரித்து கொட்டுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கோபமடைந்த நல்லசாமி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு லட்சுமியைக் குப்பை கூடையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து சக தூய்மைப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு, சம்பந்தப்பட்ட கடையை முற்றுகையிட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பெருமாள் கோவில் வீதி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்தியதுடன், தாக்குதலில் ஈடுபட்ட நல்லசாமியைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கக் கோரி தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
