விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி (33) என்பவர் கொத்தனார் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே இவருடைய உடன்பிறந்த அண்ணன் வெங்கடேசன் என்பவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிர் இழந்த நிலையில் வெங்கடேஷன் உயிரிழப்புக்கு தம்பி ராமசாமி குடும்பம் தான் காரணம் என்று நினைத்து வெங்கடேசன் குடும்பத்தினர் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.
வெங்கடேசன் மற்றும் ராமசாமியின் வீடுகள் அருகருகே இருப்பதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே இட பிரச்சனையும் இருந்துள்ளது. எனவே இரண்டு குடும்பத்தினருக்கும் நீண்ட நாள் பகை இருந்து வந்த நிலையில் வெளியூருக்கு வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த ராமசாமி நேற்று மதுரை மாவட்டத்திற்கு கொத்தனார் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பி ஆவியூர் பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த ராமசாமியின் அண்ணன் வெங்கடேசனின் 20 வயதுடைய மகன் பிரவீன் மற்றும் அவருடைய நண்பர்களான செல்லப்பாண்டி, கருப்பசாமி, சஞ்சீவ் ஆகிய நான்கு பேரும் கஞ்சா போதையில் அறிவாளால் கத்தியுடன் ராமசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். அப்போது பிரவீன், எங்க அப்பாவை கொன்னுட்டீங்க அதே மாதிரி நீயும் சாவு என்று கூறி வெட்டிய நிலையில் அவர்களை தடுக்க வந்த பொது மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமசாமியை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ராமசாமியை கொலை செய்து தப்பி ஓடிய நான்கு பேரும் போலீசில் சரணடைந்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சித்தப்பாவை சொந்த அண்ணன் மகனே கஞ்சா போதையில் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
