நெல்லையில் வெறும் 750 ரூபாய் பாக்கி தொகையை செலுத்துவதற்கு சிறிது காலதாமதமானதால் பிரபல பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் மனைவியையும் தாயையும் மிக கேவலமாக பேசிய ஆடியோ வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி பகுதியை சேர்ந்த கண்ணையா ராமகிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றார். அத்துடன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில் இவர் தனது தேவைக்காக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இந்த கடனுக்காக மாதம் 4750 தவணைத் தொகையை மிக சரியாக செலுத்தி வந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக எந்த ஒரு பாக்கியும் இல்லாமல் தனது கடனை நேர்த்தியாக செலுத்தியுள்ளார். இந்த மாதம் மட்டும் சிறிது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தவணைத் தொகையான 4750 ரூபாயில் 4000 ரூபாயை ஒரு மொபைல் கடை மூலமாக உடனடியாக செலுத்தியுள்ளார். மீதமுள்ள வெறும் 750 ரூபாய் பணத்தை மட்டும் அன்று இரவு 10 மணிக்குள் கட்டி விடுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த மீதமுள்ள 750 ரூபாய் தொகைக்காக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்ற வசூல் முகவர் நடந்து கொண்ட விதம் மனிதநேயமற்றது.
இரவு நேரம் என்று கூட பார்க்காமல் கண்ணையார் ராமகிருஷ்ணனுக்கு தொடர்ந்து போன் செய்து வந்த நபர் மிக மோசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். இன்று இரவு கொள் பணம் வரவில்லை என்றால் நாளை காலையில் உன் வீட்டுக்கு வருவேன், உன் மனைவியையும், உன் அம்மாவையும் கூட்டிட்டு போவேன் என்று மிகக் கேவலமாக பேசியுள்ளார். உன் பொண்டாட்டி என்ன எவனையும் கூட்டிட்டு போக மாட்டாளா என்று வாய் கூசும் அளவுக்கு ஆபாசமாக பேசும் அந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தரகுறைவான பேச்சை கேட்ட கண்ணையா ராமகிருஷ்ணனின் மனைவி அவமானத்தில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட கேவலமான பேச்சை கேட்ட பிறகு நான் எதற்கு உயிரோடு இருக்க வேண்டும் என்று கதறி அவருடைய மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் மணமுடைந்த கண்ணையா ராமகிருஷ்ணன், மறுநாள் காலை சம்பந்தப்பட்ட பைனான்ஸ் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளார்.
ஆனால் அங்கிருந்த மேலாளர்கள் வைகுண்டம் மற்றும் வரதராஜன் ஆகியோர் அவருக்கு முறையான பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தினர். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அந்த இடத்தை போர்க்களம் ஆக்கியது. அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். தற்போது இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
