தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது 2026 சட்டமன்றத் தேர்தல் பல திருப்பங்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகை என்பது பலரையும் கதி கலங்க வைத்துள்ளது. விஜய்க்கு கட்சி ஆரம்பித்தது முதலே மக்கள் மத்தியில் ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது. விஜய்க்கும் அவருடைய ரசிகர்களுக்கும் அரசியல் அனுபவம் இல்லை என்று விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டாலும் இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து விஜய்க்கு பலத்தை கூட்டினார்.
இவர் கட்சியில் இணைந்த கையுடன் இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் விஜய் கட்சியில் சேர உள்ளனர். அதற்கான பணிகளை நானே மேற்கொள்வேன் என்று கூறி பரப்பரப்பை கிளப்பினார். இதனிடையே மக்கள் நீதி மய்யம் மாதிரிதான் இன்றைக்கு தமிழக வெற்றிக்கழகம் உள்ளது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த கமல்ஹாசன் தான் விஜய். கிறிஸ்தவர்களின் ஓட்டு முழுவதும் ஜோசப் விஜய்க்கு தான் விடும். திமுகவும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு கிறிஸ்தவர்களை ஏமாற்றி வருகிறார்கள். விஜய் கட்சியை இயக்குவதே திமுக தான் என்று அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
