ஒடிசாவில் இறந்த தந்தை, மயக்கம் அடைந்த தாயுடன் இரவு முழுவதும் குளிரில் வனப்பகுதியில் ஐந்து வயது சிறுவன் தனியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த மஜ்ஹி மற்றும் ரிங்கி மஜ்ஹி தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளனர். இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று அங்கு தம்பதியினர் விஷம் அருந்தியதாக தெரிகிறது.
இதில் தந்தை உடனே உயிரிழந்த நிலையில் தாய் மயக்கம் அடைந்துள்ளார். பிறகு அவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ஆனால் ஐந்து வயது சிறுவன் இரவு முழுவதும் வனப்பகுதியில் குளிரில் தனியாக இருந்துள்ளான். பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோரம் சென்றவர்களிடம் உதவி கேட்டபோது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெற்றோர்களால் பூச்சிக்கொல்லி மருந்து கொடுக்கப்பட்ட போதிலும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான். சிறுவன் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன. முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் தனது தாத்தா பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
