சென்னையில் சமீபத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் 2ம் இடம் பிடித்தது. இந்த படத்தில் நடித்த சசிகுமாருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற நடிகர் சசிகுமாருக்கு இயக்குனர் பாலா பாராட்டு மடல் எழுதியிருக்கிறார். அந்த வாழ்த்து மடலில், பேரன்பு சசி. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடு தான் இந்த கடிதம்.
கடந்த 25 ஆண்டுகளாக உன்னைப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன், பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்தி சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை, அதை சகலருக்கும் கடத்தும் உன் அன்பை நேரில் மட்டுமல்ல, திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன். உன் இயல்பான எளிமைக்கு இருக்கும் பல ரசிகர்களின் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. இறுதியாக உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்த சம்பவக்காரன் சசியை என் இனிய இயக்குனனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன். அண்ணனாக மகிழ்ந்து பாலா என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
