சென்னை மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர் ஒருவரை, சீனியர் மாணவர்கள் முட்டி போட வைத்து ராக்கிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுதியில் நடந்த கபடி போட்டியின் போது ஏற்பட்ட தகராறில், சீனியர் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த மாணவரைக் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவர் விடுதியை விட்டு வெளியேறி, பெங்களூருவில் உள்ள தனது பெற்றோருக்குத் தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகிய மருத்துவக் கல்வி நிர்வாகம், ராகிங் செயலில் ஈடுபட்ட ஆறு மாணவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தத் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
விடுதியில் நடந்த கபடி போட்டி எப்படித் தாக்குதலாகவும் ராகிங்காகவும் மாறியது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
