திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த ஜெயசீலன் (25) என்பவர் கிடைத்த வேலைகளுக்குச் சென்று வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இருந்த போதும் தன்னை ஒரு கல்லூரி மாணவனாக கருதிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனைப் பார்த்து சில பெண்கள் லைக்ஸ் போட்டுள்ளனர். அவர்களில் சாணார்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜெயசீலனுடன் அறிமுகமாகியுள்ளார்.
இருவருக்கும் இடையே தொடங்கிய நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பிறகு செல்போனில் மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்தனர். அடிக்கடி இருவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டனர். நாட்கள் செல்ல செல்ல இளைஞர் ஜெயசீலனின் நடவடிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த கல்லூரி மாணவி மெல்ல மெல்ல அந்த வாலிபரிடமிருந்து விலக முயற்சித்தார். ஒரு கட்டத்தில் அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டு காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் கல்லூரி மாணவிக்கு ஜெயசீலன் மீண்டும் மீண்டும் காதல் தூது விடுத்துள்ளார். அதற்கு மாணவி சம்மதிக்காத நிலையில் அவரை மிரட்டி தன்னுடைய வலிக்கு கொண்டுவர சதி திட்டம் தீட்டினார். அதன்படி காதலிக்கும்போது மாணவி அனுப்பிய போட்டோக்களை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். அதனை மாணவி தட்டி கழித்த ஆத்திரத்தில் ஜெயசீலன் மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி தனது பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். உடனே மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாமல் ஆண் நண்பர்களுடன் பழகும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தேவையில்லாமல் தங்களுடைய சுய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
