விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த எஸ்.ஐ. அருண்குமார் (30) என்பவருக்கும், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த இளவரசி (25) என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று, சாத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அருண்குமார் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, மனைவி இளவரசி தூக்கில் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது. அவரது உடலை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.
இளவரசியின் தந்தை கருப்பசாமி அளித்த புகாரில், திருமணத்தின்போது 81 பவுன் நகை, கார் வாங்க ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், அதன் பின்னரும் கூடுதல் வரதட்சணை கேட்டு அருண்குமார் தன் மகளைத் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், அருண்குமாருக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதைக் கண்டித்ததால் அவர் தனது மகளை அடித்துக் கொலை செய்துவிட்டார் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். இறப்பில் மர்மம் இருப்பதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இளவரசியின் உறவினர்கள், எஸ்.ஐ. அருண்குமாரைக் கைது செய்யக் கோரி விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.
