தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராய வேலூர் பகுதியில் வசித்து வரும் 15 வயது பள்ளி மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலகோம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியை அதே ஊரை சேர்ந்த 52 வயது பிச்சைமணி என்பவர் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி தன்னுடைய வலையில் சிக்க வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மற்றொரு பதற வைக்கும் விஷயம் என்னவென்றால் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த காட்சிகளை அங்குள்ள 16 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய மொபைல் போனில் ரகசியமாக பதிவு செய்துள்ளான். அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அந்த சிறுவனும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிறுமியை தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மகளிடம் விசாரித்ததில் நடந்த உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து தாய் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை ஏமாற்றி உறவு கொண்ட பிச்சை மணியையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
