தர்மபுரி மாவட்டம் ஜொள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெய்சங்கர் (58). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு சரவணன் (32) என்ற மகன் உள்ளார். பின்னர், ஜெய்சங்கர் சித்ரா (45) என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். வேலைக்குச் செல்லாமல் மதுப் பழக்கத்திற்கு அடிமையான சரவணன், அவரது சித்தி சித்ராவுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சித்ரா முறையிட்டதால், ஜெய்சங்கர் மகனைக் கண்டித்துள்ளார். இருப்பினும், சரவணன் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால், ஜெய்சங்கர், அவரது இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகன் கோவிந்தராஜ் மற்றும் அன்பரசு (27) ஆகியோருடன் சேர்ந்து சரவணனைக் கொல்லத் திட்டமிட்டார். அதன்படி, முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்த சரவணனை, மேல் மாடிக்கு அழைத்துச் சென்று செங்கலால் தாக்கி அடித்துள்ளனர்.
இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மூவரும் சேர்ந்து உடலை மாடியில் இருந்து இழுத்து வந்து வீட்டின் முன் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். மறுநாள் காலை, சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகக் கூறிய நிலையில், காரிமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் இது கொலை என்பது அம்பலமானது. இதையடுத்து, ஜெய்சங்கர் மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
