“ரூ.1.5 கோடி ஜிஎஸ்டி கட்டுங்க…” கூலி தொழிலாளிக்கு வந்த சோதனை…! பென்ஷனை நிறுத்தியதால் பரிதவிக்கும் 70 வயது முதியவர்….!!

By Devi Ramu on கார்த்திகை 21, 2025

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த 70 வயதுக் கூலித் தொழிலாளி வேலாயுதம், தொழிற்சாலையில் வேலை பார்த்து காலமான தன் மனைவி பெயரில் வந்த பி.எஃப். ஓய்வூதியத் தொகையைப் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அவருக்கு ஓய்வூதியம் வரவில்லை.

இது குறித்து வங்கிக்குச் சென்று விசாரித்தபோது, ‘உங்கள் பெயரில் ₹1.5 கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கி உள்ளதால், கணக்கு முடக்கப்பட்டுள்ளது’ என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த வேலாயுதம், வேலூரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டபோது, அங்குள்ள அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி திருப்பி அனுப்பியுள்ளனர்.

   

ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அவர்கள் புகாரைப் பெற மறுத்து, பொருளாதாரக் குற்றப்பிரிவு அல்லது சென்னை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில்தான் விசாரிக்க முடியும் என்று கூறி முதியவரை அலைக்கழித்துள்ளனர். இதனால் செய்வதறியாது தவிக்கும் வேலாயுதம், தனது கணக்கு மீதான தடையை நீக்க உரிய அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

   

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும், கூலித் தொழிலாளிகளின் ஆவணங்களைத் திருடி, போலியாக நிறுவனங்களைத் தொடங்கி, ஜி.எஸ்.டி. வரி மோசடிகளில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு, அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவது தொடர்வதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.