கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்ததால், கடும் பணிச்சுமைக்கு உள்ளாகியிருந்த பூத் லெவல் அதிகாரி ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டம், பையனூர் அருகே உள்ள ஏற்றுகுடுக்கா பகுதியைச் சேர்ந்த அனீஷ் ஜார்ஜ், ஒரு தொடக்கப் பள்ளியில் பியூனாகப் பணியாற்றி வந்தார். அதிக பணிச்சுமை காரணமாக, தன்னை பி.எல்.ஓ பணியில் நியமிக்க வேண்டாம் என்று அவர் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், கடந்த சில நாட்களாக இரவு பகலாக அவர் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று அனீஷ் ஜார்ஜ் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பணிச்சுமைதான் அவரது தற்கொலைக்குக் காரணம் என்று அவரது உறவினர்களும் உடன் பணிபுரிந்தவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
