தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.
இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் தனித்து தான் போட்டி என சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.
இருந்தாலும் விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுக மற்றும் பாஜக கட்சியைத் தவிர பிற கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்று தமிழக வெற்றிக்கழகம் முக்கிய தலைவரான அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை இணைக்க திட்டமிட்டு இபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார். தமிழக வெற்றி கழகம் கட்சியை மனதில் வைத்தே ஜனவரியில் மெகா கூட்டணி அமையும் என்று அவர் அறிவித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரள விஜய் கிரீன் சிக்னல் கொடுப்பாரா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
