தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் தங்கள் அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் செங்கோட்டையன் பத்து நாட்களில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணை வேண்டும் என இபிஎஸ்-க்கு கெடு விதித்ததால் அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கி உத்தரவிட்டார்.
அதன் பிறகு செங்கோட்டையன் சற்று மௌனம் காத்து வந்த நிலையில் சமீபத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்திருந்தார். இதனால் செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார். இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, எனக்கும் மன வருத்தம் தான் உள்ளது. ஆனால் தலைமை சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இபிஎஸ் செங்கோட்டையனை நீக்கி உள்ளார். தலைமை சொல்வதற்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும். எனக்கும் கூட தான் மன வருத்தம் இருக்கு. யாருக்கு மன வருத்தம் இருந்தாலும் அதை பொதுச் செயலாளரை பார்த்து தான் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு ஊடகங்கள் வாயிலாக சொல்லக்கூடாது. பொதுச் செயலாளர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாங்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்கத்தான் செய்கிறோம். எனக்கும் மன வருத்தம் இருக்க தான் செய்கிறது. என்னை அவர் நல்ல முறையில் தான் பார்த்துக் கொள்கிறார். கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய இபிஎஸ்ஐ நாம் பாராட்ட வேண்டும் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
