பீகாரைச் சேர்ந்த 28 வயது தொழிலாளி செப்டம்பர் மாதம் 26ம் தேதி சென்னையில் ரயில் மோதி விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரது இடது கை தோள்பட்டை வரை துண்டான நிலையில் வலது கை மணிக்கட்டு வரை சேதமடைந்தது. அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பேராசிரியர் மருத்துவர் பி ராஜேஸ்வரி, உதவி பேராசிரியர்கள் ரஷிதா பேகம், முதுநிலை மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் 10 மணி நேரம் அந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்து துண்டான இடது கையின் பகுதியை வலது முழங்கையில் இணைத்துள்ளனர்.
எலும்பு கட்டமைப்பு, தசை நரம்பு மற்றும் ரத்த குழாய்கள் மறு சீரமைக்கப்பட்டு வலது கையில் ரத்த தோட்டத்தை சீராக்கியுள்ளனர். அந்த கையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே இதற்கு முன்பு ஒரே ஒரு முறை தான் கைகளை மாற்றி பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உலக அளவில் 3 சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டது.
கிராஸ் ஹெண்ட் ரீப்ளான்டேஷன் என அழைக்கப்படும் இந்த சிகிச்சையை அரசு மருத்துவமனையில் மேற்கொள்வது இது முதல் முறை. அதை சரியாக செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இரு கையையும் இழந்த வாலிபருக்கு தற்போது ஒரு கை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன் கூறியுள்ளார்.
