தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பாஜக ஆட்சியை தமிழகத்தில் எப்படியாவது நிலைநாட்ட வேண்டும் என்று உறுதியாக உள்ளதால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.
இதனிடையே அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைய உள்ளதாக இபிஎஸ் மறைமுகமாக கூறியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என இபிஎஸ் பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தமிழக வெற்றி கழகம் கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அந்த சமயத்தில், கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே என உணர்ச்சி பொங்க பேசினார். இது அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
