கோயம்புத்தூர் மாவட்டம் பழனியப்பா லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் (60). இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது வீட்டை புதுப்பித்து கட்ட முடிவு செய்தார். வீட்டில் கதவு, ஜன்னல், கட்டில், பீரோ மற்றும் மரத்தால் ஆன அலங்கார வேலையை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வகையில் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த கட்சி தொழிலாளியான மாதவன் என்பவர் டேனியல் வீட்டில் வேலை பார்த்துள்ளார்.
கடந்த 10-ஆம் தேதி டேனியல் பீரோவை திறந்து பார்த்த போது 20 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மாதவன் வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டேனியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாதவனை பிடித்து விசாரித்த போது அவர் 20 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி ஆகியவற்றை திருடியது உறுதியானது. அவரிடம் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் மாதவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
