தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் என அனைவருமே மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் ஈபிஎஸ் இடம் கொடுக்காமல் தன்னந்தனி ஆளாக நின்று அதிமுகவை வழிநடத்தி வருகின்றார்.
இந்நிலையில் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பது சிரமம், ஆனாலும் அதை செய்து முடிப்பேன் என்று சசிகலா திட்டவட்டமாக கூறியுள்ளார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவை மீண்டும் இணைத்து அனுபவம் தனக்கு உள்ளது என்றார். மேலும் அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற அண்ணாவின் வழியில் நடக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் சசிகலா கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு அதிமுகவில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
