நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படங்கள்தான். பெங்களூர் போன்ற ஒரு நகரத்தில் சராசரியாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் மாலுக்கு சென்று திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலவாகும். சினிமாவுக்கு டிக்கெட் மட்டுமல்ல பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களுக்கான கட்டணமும் அதிகம் தான். இந்நிலையில் கர்நாடக மாநில அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட்களின் விலை வரியில்லாமல் அதிகபட்சமாக 200 ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.
எனினும் 75 அல்லது அதற்கு குறைவான இருக்கைகள் கொண்ட பிரீமியம் வசதி கொண்ட திரையரங்குகளுக்கு இந்த விலை கட்டுப்பாடு கிடையாது. இந்த வரைவு விதிகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் 15 நாட்களுக்குள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இந்த புதிய விதி பொதுமக்களுக்கு திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
