தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருந்த விஜய், தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி, அரசியல்வாதி ஆகியுள்ளார். அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ள விஜய், தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், சில ரசிகர்கள் அவரை முதலமைச்சராக பார்க்க ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சி தொடங்கி சில நாட்களிலேயே, சுமார் 8 லட்சம் பேர் வரை கலந்து கொண்ட முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் நடத்தி அசத்தினார். அதேநேரம் மாநாடு தொடர்பாக பல புகார்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில், த.வெ.க.,வின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. ஏற்கனவே 25ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த மாநாடு, விநாயகர் சதுர்த்தி வருவதால், காவல்துறையின் அறிவுரையின்படி, மூன்று நாட்களுக்கு முன்பாக நடைபெறவிருக்கிறது. மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காவல்துறை மூலம் ஆளும் கட்சியினர் மாநாட்டை தடுக்க முயற்சித்து வருவதாக, நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில், செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், த.வெ.க மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “முடிந்தால் தடுத்துப் பார்” என பேசியுள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்த பொழுது, அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த செந்தில், தற்பொழுது விஜய்க்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
