அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் .அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னுடைய எழுச்சி சுற்றுப்பயணம் மூலமாக 46 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 15 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். சுற்றுப்பயணத்தில் மக்களின் உற்சாகம் ஆரவாரம் பார்க்கும்போது 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். பெரிய கட்சி வரும்போது சொல்கிறேன். யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
தவறுதலாக பேசி அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்க முயற்சிக்கிறார்கள். முதலமைச்சரும், உதயநிதியும் பிரதமர் உடைய கதவை தட்டினார்கள். அவர்கள் தட்டினால் சரி. அதுவே நான் உள்துறை அமைச்சரை சந்தித்தால் அது தவறா? அவர் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தானே. அதில் என்ன தவறு இருக்கிறது? அதிமுக பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகியுள்ளது. கட்சியில் சிலவற்றை மட்டுமே வெளிப்படையாக சொல்ல முடியும். எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது.
திமுக நிலைமை மோசமாகிவிட்டது அதனால் வீட்டிற்கு சென்று ஓடிபி வாங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் மக்களிடம் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை கொடுத்து அதற்கு மார்க் அடிப்படையில் டிக் செய்து கொடுக்கலாம். விருப்பமில்லாவிட்டால் அவர்கள் விட்டுவிடலாம். முதலமைச்சரும், துணை முதலமைச்சர் கீழ்த்தரமாக பேசினார்கள் .நான் எந்த ஒரு இடத்திலும் மரியாதை தவறி பேசியதே இல்லை” என்று பேசியுள்ளார்.
