திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி அந்த பகுதியில் உள்ள நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து திரும்பி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுமி தனியாக செல்வதை நோட்டமிட்ட நபர் ஒருவர் சிறுமியின் வாயை கையால் பொத்தி மாந்தோப்புக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.
இதனையடுத்து குற்றவாளியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு உதவியாக மர்ம நபரை அடையாளம் காணவும், துப்பு துலக்கவும் தகவல்களை கொடுப்பவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 14 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். அவரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் காட்டியுள்ளார்கள். தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் இவர் தான் என்று சிறுமி அடையாளம் காட்டியுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவர் மனநல பாதித்தவரா? என்பது குறித்த பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
