2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் களம் தயாராகி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் பேசு பொருளாக மாறி உள்ளது. திமுக மற்றும் பாஜகவுடன் ஒருபோதும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி இல்லை என்று முதல்வர் வேட்பாளர் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். இதை விடையே விஜய் தங்களுடைய கூட்டணிக்கு வருவார் என்று அதிமுக தலைப்பு பெரிதும் எதிர்பார்த்துள்ளது. ஆனால் விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் அதிமுகவுக்கான கதவு மூடப்பட்டு விட்டது என்பதை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். ஏனென்றால் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் உறுதியாக உள்ளனர்.
எனவே தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிலைப்பாட்டால் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. விஜய் அரசியலுக்கு வருவது அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இல்லை. தன்னுடைய சொந்தக் கட்சியை பலப்படுத்தி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதற்காக தான். அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களை பொருத்தவரை விஜய் எப்படியும் தங்கள் பக்கம் வந்துவிடுவார் எனவும் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்துவிடும் என்ற எண்ணமும் இருந்தது. அவர்களின் நம்பிக்கை தற்போது உடைந்து விட்டது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை முதல் மக்கள் நலத்திட்டங்கள் வரை திமுக மீது கடும் விமர்சனங்களை விஜய் முன் வைத்துள்ளார்.
தமிழக அரசியலில் திராவிட கட்சிகள் தங்களை நிலை நிறுத்தி வரும் சூழலில் அவற்றுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகின்றது. மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு செய்துள்ள பல துரோகங்களை விஜய் மேடைப்பேச்சுகளில் சுட்டிக்காட்டி வருகின்றார். எனவே பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக பக்கம் மட்டுமே திரும்பவிடாமல் விஜய் காய் நகர்த்தி வருவதை இதன்மூலம் பார்க்க முடிகிறது. திமுக அரசு மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் விஜய் அதிமுகவை பெரிதாக சீண்டி பார்க்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அதிமுக வாக்கு வங்கியை தன் பக்கம் இழுக்கும் முயற்சிதான். ஒருவேளை அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் நிலை வந்தால் அது கட்சியின் தொண்டர்களை ஒருங்கிணைத்து வழுப்பெரும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துவிடும். இதனைத் தவிர்ப்பதற்காக தான் விஜய் அதிமுக பக்கம் திரும்பாமல் திமுகவை மட்டும் குறி வைத்து பேசி வருகின்றார். இதனால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கும் என்று நன்றாகவே தெரிகிறது.
