தமிழகத்தில் பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கான வழிகாட்டுதலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடுகள் உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவாவதை தவிர்ப்பதும், நல்லிணக்கம் மற்றும் நல்ல பண்புகளை வளர்ப்பதும் முக்கியமானது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகிறது. அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளை மையமாகக் கொண்டு நன்னெறி வகுப்புகள் வாரம் தோறும் நடத்த வேண்டும்.
இதனைத் தவிர இலக்கியம், வினாடி வினா, நூலகம், வானவில் மன்றம் உள்ளிட்ட மன்றங்களில் மாணவர்கள் பங்கேற்பதற்கு வழி செய்ய வேண்டும், நாடகம், இசை, நடனம் உட்பட கல்வி சாரா செயல்பாடுகளில் மாணவர்களை தொடர்ந்து ஈடுபடுத்த வேண்டும். வகுப்பறையில் மாணவர்களை 15 நாட்களுக்கு ஒரு முறை வரிசை மாற்றி அமர வைக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான எந்த ஒரு விவரங்களும் இடம்பெறக்கூடாது. அதனைப் போலவே ஆசிரியர்கள் மாணவர்களின் சாதியை குறிப்பிட்டு அழைப்பதோ அல்லது கருத்து தெரிவிக்கவும் கூடாது.
மாணவர்களின் உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறையில் அறிவிக்க கூடாது. மாணவர்கள் தங்கள் கைகளில் வேறுபாடுகளை அடையாளப்படுத்தக்கூடிய வண்ணக் கயிறுகள்,மோதிரங்கள் அணிவதற்கு தடை விதிப்பதுடன் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க அவர்களின் பெற்றோர்களிடம் பரிந்துரைக்க வேண்டும். முக்கியமாக பாலியல் குற்றங்கள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறைக்கு உடனே தகவல் தெரிவிப்பதுடன் உடற்கல்வி பாட வேலைகளில் கட்டாயம் மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
