2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று வேண்டி அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் திடீரென்று தியானம் மற்றும் சிறப்பு பூஜை செய்ததாக வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது 2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அணி இணைந்திருக்கிறது. பாஜக – அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. இதே நேரத்தில் தேர்தலுக்கு முன்பாக கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகலாம் என்றும், அதிமுக தலைமையில் மற்றொரு கூட்டணி அமையும் என்று யூகங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதற்காக திடீரென்று கோவிலில் தியானம் மேற்கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் சரபேஸ்வரர் என்ற கோயிலுக்கு நள்ளிரவில் சென்ற இவர் சிறிது நேரம் தியானம் மேற்கொண்டுள்ளார். பிறகு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. இவர் இப்படி திடீரென்று பூஜை, தியானம் நடத்தியது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
