விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. அதன் பிறகு இந்த திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் ஈடுபட்டிருந்தனர். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில் படம் மார்ச் 27ஆம் தேதி மாலை தான் வெளியானது. வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல்கள் இருந்ததால் சொன்னபடி இந்த திரைப்படம் அன்று காலை வெளியாகவில்லை.

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிக்கல்களை சமாளித்து இந்த திரைப்படத்தை மாலை முதல் திரையரங்குகளில் வெளியிட்டனர். என்னதான் இந்த திரைப்படம் முதல் நாள் மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டாலும் வசூல் நன்றாகவே அமைந்திருந்தது. முதல் நாளில் வீர தீர சூரன் திரைப்படம் மூன்று கோடி வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில் காலை முதலே படம் திரையிடப்பட்டு இருந்ததால் வசூல் மேலும் அதிகரித்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் போக போக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை உலக அளவில் மொத்தமாக 19 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படியான நிலையில் வீர தீர சூரன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் ஹீரோவாக நடித்த விக்ரம் 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து விக்ரமுடன் முதல்முறையாக இணைந்து நடித்த எஸ் ஜே சூர்யா இப்படத்தில் நடிக்க 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

அடுத்து மலையாள நடிகரான சூரஜ் வெஞ்சாராமூடு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த துஷாரா விஜயன் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். படத்தின் இயக்குனர் அருண்குமாருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாசுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் பட்ஜெட் 110 கோடி என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
