தமிழ் சினிமாவுக்கு இயக்குனர் ஷங்கரால் அறிமுகப்படுத்தப் பட்டவர் பரத். பாய்ஸ் படத்தில் ஐந்து பேரில் ஒருவராக தோன்றிய அவரை அதன் பின்னர் தான் தயாரித்த காதல் படத்தில் கதாநாயகனாக்கி வெற்றி படத்தைக் கொடுத்து ஒரு ஹீரோவாக்கினார். அதன் பின்னர் பரத் அடுத்தடுத்து சில ஹிட்ஸ்களைக் கொடுத்து நம்பிக்கை அளிக்கும் ஹீரோவானார்.
தமிழ் மட்டும் இல்லாமல், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார். இவரின் முழு பெயர் பரத் ஸ்ரீனிவாசன் என்பதாகும். திருச்சியில் பிறந்து வளர்ந்த நடிகர் பரத் பயிற்சி பெற்ற நடன கலைஞரும் ஆவார். பட்டியல், எம் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை, வானம், 555, காளிதாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். எம் மகன் திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. இது தவிர கூடல் நகர், நேபாளி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் பரத்துக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத் தந்தன.
இப்படி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த பரத் இப்போது தமிழ் சினிமாவில் வணிகமதிப்பு இல்லாத ஒரு நடிகராகப் போராடிக் கொண்டிருக்கிறார். இப்போது தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர் இருக்க வேண்டிய இடத்தில் பரத்தும் இருந்திருக்க வேண்டும். ஆனால் மோசமான மசாலா படக் கதை தேர்வுகளால் பரத் சறுக்கினார். அதேபோல வளர்ந்து வரும் காலகட்டத்தில் சின்னத் தளபதி என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அவர் மேல் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தினார். தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து தற்போது மார்க்கெட்டிலேயே இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் தான் நடித்த சித்தவைத்திய சிகாமணி என்ற படம் ஏன் தோல்வி அடைந்தது குறித்து பேசியுள்ளார். அதில் “சித்த வைத்திய சிகாமணி ரொம்ப சிறப்பான திரைக்கதை. அதை சுந்தர் சி சார் மாதிரி ஒரு இயக்குனர் இயக்கி இருந்தால் அந்த படம் சிறப்பாக வந்திருக்கும்.
அந்த படத்தைக் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. கேட்ட அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்களையும் கொடுத்தது. ஆனால் அனைவரும் இருந்தும் காமெடி வொர்க் அவுட் ஆகவில்லை. எல்லாக் காட்சிகளிலும் எல்லா நடிகர்களையும் கொண்டுவந்து எதாவது கத்தினால் காமெடி வந்துவிடாது என்பதுதான் நான் அந்த படத்தின் குறையாகப் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
