தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
பல வருட போராட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் ஹீரோவானதும் , அதன் பிறகு பெரும்புகழ் பெற்றதும் உலகறிந்த வரலாறு. அவரின் வளர்ச்சிக்கு அவர் திமுகவில் இருந்ததும் ஒரு காரணம். அதுபோல அவரின் திரையுலக வெற்றி திமுகவுக்கும் பயன்பட்டது. கடவுள் பக்தராக இருந்தாலும் திமுகவில் இருந்ததால் எம் ஜி ஆர் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்ல மாட்டார். ஆனால் அவர் வீட்டில் அவர் பூஜை செய்வதுண்டு.
எம் ஜி ஆர் வளர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ஆனதும், அதன் பின்னர் அவருடைய படங்களில் எல்லாவற்றையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். பாடல்களுக்கான ட்யூனை ஓக்கே செய்வது முதல் பாடல் வரிகளில் கரெக்ஷன் சொல்வது வரை எல்லா முடிவையும் அவர் எடுப்பார் என்று சொல்வார்கள். இதனால்தான் ஏவிஎம் போன்ற பெருமைமிகு ஸ்டுடியோ அவரை வைத்து அதிக எண்ணிக்கையில் படம் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வளவும் அவர் செய்வது சினிமாவின் பல துறைகளிலும் அவருக்கு இருந்த அறிவால்தான் என வாதாடுபவர்களும் உண்டு.

இந்நிலையில் எம் ஜி ஆர் பாரத் என்ற பட்டத்தைப் பெற்றபோது பத்திரிக்கையாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் பேசிய எம் ஜி ஆர் அப்போது தன்னை சுற்றி எழுந்த சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பேசும்போது “அனைவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சினிமாவில் போட்டி பொறாமை போன்றவற்றுக்கு இடமில்லை. நான் முப்பது ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் இருக்கிறேன். என்னால் கெட்டவர்கள் அதிகமில்லை, வாழ்ந்தவர்கள்தான் அதிகம். நான் அப்படியே எதாவது தவறு செய்திருந்தாலும் என் வாழ்க்கைக் குறிப்பிலே குறிப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
