தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மாதவன் பங்குதாரராக உள்ள பேரண்ட் Army (parent Geenee) என்ற செயலியின் அறிமுக விழா சென்னையில் ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த செயலி பெற்றோருக்கு அடங்காமல் தறி கெட்டு அலையும் குழந்தைகளின் சமூக ஊடகம் மற்றும் இணைய உலகின் ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் கண்காணிக்கிறது. உடனிருந்து பெற்றோர்கள் கவனிக்க முடியாத சூழலில் இந்த செயலி கண்காணித்து பெற்றோருக்கு தகவல் அளிக்கிறது. இதன் மூலம் குழந்தைகளை கண்காணிக்கவும் நல்வழிப்படுத்தவும் முடியும். இந்த செயலியை அறிமுகப்படுத்திய பிறகு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன், ஒரு பெற்றோராக இன்று ஊடகங்கள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை நீங்கள் அனைவரும் உணர்ந்து இருப்பீர்கள்.

பெற்றோரை விட சமூக ஊடகங்கள் மூலமே குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்கின்றனர். இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு அனைத்தும் உள்ளது. எந்த நேரமும் திரை பார்த்துக் கொண்டிருப்பது, சமூக ஊடகங்களில் உலவும் குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. என் பையனை தேடி சில நண்பர்கள் வருவார்கள். அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் என்று என் மனைவியிடம் கேட்பேன். அவர்கள் எல்லோரும் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள் என்று சொல்வார். அவர்கள் ஐந்து பேரும் ஒரு தனி அறையில் இருந்தால் கூட அவர்கள் தனித்தனியான உலகத்தில் இருக்கின்றனர். ரீல்ஸ் பார்ப்பது மற்றும் கேம் விளையாடுவது என்று நேரத்தை செலவிடுகின்றனர்.

அருகில் இருப்பவருடன் பேசிக்கொள்வதே கிடையாது. பேசுவதும் கேட்காது. ஏனென்றால் அனைவரும் ஹெட்செட் அணிந்திருப்பார்கள். இந்தியாவில் இருக்கும் ஐந்து பேர் நெதர்லாந்திலோர் ரஷ்யாவிலோ இருக்கும் ஐந்து பேருடன் வீடியோ கேமில் மோதி கொள்கிறார்கள். அவர்கள் விளையாடும் போர்ட் நைட் என்ற கேம் என்னை மிகவும் பாதித்தது. அப்போதெல்லாம் ஒரு பள்ளி வகுப்பில் 40 பேர் இருந்தால் நமக்கு என்ன அங்கீகாரம் என்று நினைத்தார்கள். நம்முடைய தனித்துவம் என்ன நமக்கான அடையாளம் என்ன என்பதை பற்றி சிந்தித்தனர். குறிப்பாக 20 பேருக்கு நம்மை ஊரில் உள்ளவர்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இன்று உங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் போட்டி நடத்துகிறார்கள். மோதுகின்றனர்.

வீடியோ போட்டு வேலிடேஷன் தேடுகிறார்கள். இளைஞர்கள் பிரபலமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு லைக் எவ்வளவு டிஸ்லைக் என்பதை கூட கேட்கின்றனர். அவர்கள் அடையாளம் இல்லாமல் தனிமையாக உணர்கின்றனர். இந்த தனிமை ஒரு மனசோர்வை உண்டு செய்வதால் ப்ளூவேல் போன்றவை வந்தது. இது இளைஞர்களை தற்கொலை வரை கொண்டு போனது. அது ஒரு பயங்கரமான காலமாக இருந்தது. அந்த காலத்தில் எனக்கு ஒரு குழந்தை இருந்தால் அதன் நிலை என்னவாகும் என்று யோசித்தபோது எனக்கு பயம் வந்தது. அதன் விளைவாகவே இப்படி ஒரு செயலியை உருவாக்க என்னை முனைய வைத்தது என்று மாதவன் பேசியுள்ளார்.
