ராஜகுமாரன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமன் அவர்களின் உதவியாளராக பணிபுரிந்த ராஜகுமாரன், ஆர் பி சவுத்ரி தயாரித்த காதல் கதையான நீ வருவாய் என திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தின் மூலமாகவே பெயரையும் புகழையும் பெற்றார் ராஜகுமாரன். நீ வருவாய் என திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. எல்லோரும் விரும்பும் வகையில் கதைக்களம் அமைந்திருந்தது. இது மட்டுமில்லாமல் ராஜகுமாரன் அவர்களுக்கு இந்த நீ வருவாய் என திரைப்படத்தின் மூலமாக சிறந்த கதை ஆசிரியருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதும் கிடைத்தது.

முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜகுமாரன் ஆர்பி சவுத்ரியுடன் மீண்டும் இணைந்து விக்ரம், தேவயானி, சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகியோரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை இயக்கினார். 2001 ஆம் ஆண்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படம் வெளியான அதே ஆண்டு தேவயானியும் ராஜகுமாரனும் காதலித்து வந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பிறகு 2003 ஆம் ஆண்டு முரளியை வைத்து காதலுடன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் சிறந்த குடும்ப படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதினை வென்றது.
/indian-express-tamil/media/media_files/dxMC0U6czmDzrWeyVbz2.jpg)
இயக்குனராக மட்டுமில்லாமல் சில படங்களில் நடித்தும் இருக்கிறார் ராஜகுமாரன். பூவே உனக்காக, சூரிய வம்சம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு ஆகிய படங்களில் தோன்றியிருக்கிறார் ராஜகுமாரன். இப்படியான நிலையில் ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் முதல் முதலில் சென்னைக்கு வந்த போது நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில், நான் என்னோட சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு கிளம்புவது உறுதியாகிவிட்டது. அப்போ என்னுடைய அப்பா வெறும் 40 ரூபாய் தான் கொடுத்தாரு. அன்னைக்கு ட்ரெயின் டிக்கெட் விலை 38 ரூபாய். அதையும் செலவு பண்ணிட்டா சென்னைக்கு போய் என்ன பண்றதுன்னு தெரியாம டிக்கெட் எடுக்காமயே சென்னைக்கு போயிடலாம் என்று முடிவு செய்து ரயிலில் ஏறிட்டேன்.

முதல்முறையா ரயிலில் பயணம் செய்வதால் எதுவுமே தெரியாம ஒருவேளை மாட்டிக்கிட்டா கூட நம்மளோட சூழ்நிலை அவங்களுக்கு தெரியிற மாதிரி ஒரு லெட்டரையும் எழுதி வச்சேன். ரயிலில் ஏறியதும் TTR பக்கத்திலேயே போய் உட்கார்ந்துட்டேன். கொஞ்ச நேரம் போனதுக்கு அப்புறம் தான் அவர் TTR என்பதை எனக்கு தெரிந்தது. அவர்கிட்ட சிக்குனதும் நான் எழுதி வைத்திருந்த லெட்டரை கொடுத்து நான் வச்சிருந்த கதையையும் அவர்கிட்ட சொன்ன. அதைக் கேட்ட அவர் என்னோட சூழ்நிலையை புரிந்து கொண்டு என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டேன் முன்னாடி ஒரு சிங்கம் இருக்கு என்று சொன்னாரு. அவர் சொன்னது எனக்கு சரியா புரியல.
![]()
பிறகு தான் ரயிலில் இறங்கும் போது டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர்கிட்ட மாட்டுனதும் நான் எழுதி வச்சிருந்த லெட்டரையும் கதையையும் கொடுத்துட்டேன். அவரும் அத படிச்சிட்டு அவருக்கு புடிச்ச ஒரு கவிதையை கிழிச்சி எடுத்துக்கிட்டாரு. நீ பெரிய ஆள் ஆனதுக்கு அப்புறம் நான் இந்த கவிதையை எடுத்துக்கிட்டு வருவேன் அப்போ நீ நான் யாருன்னு அடையாளம் கண்டுபிடிக்கணும் என்று சொல்லிட்டு என்ன அனுப்பி வச்சாரு என ராஜகுமாரன் ரயிலில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
