இயக்குனர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் தான் தண்டேல். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும் இப்ப படத்தின் வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் புஜ்ஜி தல்லி ஒரு பரபரப்பான ஹிட்டானது. அதனைப் போலவே இரண்டாவது சிங்கிள் நமோ நம சிவாய பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இந்த படத்தில் நாக சைதன்யா மீனவராக நடித்துள்ளார். ஆரம்பத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவிக்கு இடையேயான அதிகமான காதல் காட்சிகள் இருக்கின்றன. பிறகு மீனவர்கள் கூட்டத்தில் சைதன்யா முக்கியமான பொறுப்பை ஏற்கின்றார். பிறகு மீன் பிடிக்க போகும் பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்த கூட்டம் மாட்டிக் கொள்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தை சைதன்யா எதிர்ப்பது போல காட்டப்படுகிறது. இந்தியாவின் பலத்தை பற்றி பாகிஸ்தான் ராணுவத்திடம் அவர் பேசும் காட்சிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அங்கிருந்து அவர் எப்படி தப்பித்து வருகிறார் என்பது தான் படத்தின் கதை ஆகும். அவர் வரும் வரை சாய் பல்லவி அவருக்காக காத்திருக்கின்றார்.

இப்படியான நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நாகசைதன்யா, சாய்பல்லவி, கார்த்தி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சாய் பல்லவி, நான் இதை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும் என்றுதான் மேடை ஏறினேன். கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. மெய்யழகன் படத்தை பார்த்தால், யாராக இருந்தாலும் ஒரு சின்ன மனமாற்றம் நிச்சயம் நிகழும் என நம்புகிறேன்.

உண்மையிலேயே இவருடைய நடிப்பு சிறந்தது. இவர் நடித்த பருத்திவீரன், சிறுத்தை, இப்போ நடிச்சிருக்க படம் இனிமே நடிக்கப் போற படம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதை கட்டாயம் பாராட்டியே ஆகணும். குறிப்பா பருத்திவீரன் படத்துல நிஜமாலுமே ஒரு பொறுக்கி பையன் மாதிரி நடிச்சிருந்தாரு. இப்போ இந்த படத்துல ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி நடிச்சிருக்காரு. இயல்பாகவே அவருக்குள் Purity (புனிதத்தன்மை) இருந்தால் மட்டும் தான் திரையில் அதை அப்படியே கடத்த முடியும் என நினைக்கிறேன். இந்த மேடையில் கார்த்தி பற்றி பேசுவதில் நான் பெருமை அடைகிறேன் என சாய் பல்லவி பேசியுள்ளார்.
