தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.

ஆனாலும் அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக 15 ஆண்டுகளுக்கு மேல் வலம் வந்தார். ரஹ்மானின் வரவுக்குப் பின்னரே தமிழ் சினிமாவில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை மாறியது.
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட இளையராஜா ஒரு கட்டத்தில் தீவிர சைவராக மாறி மாமீசம் மற்றும் மது ஆகியவற்றை அறவே தன் வாழ்வில் இருந்து புறக்கணித்தார். இந்நிலையில் ஒரு மேடையில் இளையராஜா பற்றி பேசிய ரஜினிகாந்த் “நானும் சாமியும் (இளையராஜாவும்) விடிய விடிய எல்லாம் சரக்கு அடிச்சிருக்கோம். ஆனால் ஒரே நாளில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டார் அவர். அதில் இருந்து அவரை நான் சாமி என்றுதான் அழைக்கிறேன்.” எனப் பேசியுள்ளார். இளையராஜாவும் ரஜினிகாந்தை சாமி என்றுதான் அழைப்பாராம். இளையராஜாவைப் போலவே ரஜினிகாந்தும் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
