தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றதில் மறைந்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த ஔவையார், சந்திரலேகா உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தன. அதிலும் சந்திரலேகா என்ற திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெற்ற வெற்றியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
1940 ஆம் ஆண்டே திட்டமிடப்பட்டு, 3 ஆண்டுகள் முன் தயாரிப்புப் பணிகள் நடத்தி 1943 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட சந்திரலேகா திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் படம் 1948ம் ஆண்டு வெளி வந்தது. முதலில் இந்த படத்தை இயக்குனர் வேறொரு இயக்குனரை ஒப்பந்தம் செய்தார் வாசன். ஆனால் அவர் எடுத்த படம் தனக்கு பிடிக்காததால் தானே இயக்க முடிவு செய்தார்.
அதே போல அவர் தயாரிப்பில் உருவான ஔவையார் திரைப்படம் 6 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. பல முறை எடுக்கப்பட்டு இருந்த 6 மணிநேரத்துக்கும் மேற்பட்ட காட்சிகளை சுருக்கி படமாக எடுத்து 1953 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தார். அந்த படமும் சூப்பர்ஹிட் ஆனது.

தென்னிந்தியாவில் மட்டும் படங்கள் எடுத்ததும் அல்லாமல் இந்தி சினிமாவுக்கும் சென்று பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார் வாசன். அப்படி அவர் எடுத்த சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றுதான் இன்சானியாத். இந்தி சூப்பர் ஸ்டார் திலீப்குமார் அந்த படத்தில் நடித்தார். அவரோடு அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜிபி என்ற மனிதக்குரங்கு ஒன்றும் நடித்தது.
அந்த குரங்கை வரவழைக்க இரு நாட்டு அரசுகளிடமும் அனுமதி பெற்று அழைத்து வந்து அதற்காக சிறப்பு உணவுகளை எல்லாம் ஏற்பாடு செய்துகொடுத்து பைவ் ஸ்டார் ஓட்டலில் அதைத் தங்கவும் வைத்தாராம் வாசன். அப்படி அந்த குரங்கு 10 நாட்கள் அந்த படத்தில் நடித்ததாம். அந்த படத்தின் வெற்றிக்கு அந்த குரங்கும் ஒரு காரணமாக அமைந்ததாம்.
