தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த நடிகை தான் டி.ஆர் ராஜகுமாரி. 1922 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இவர் பிறந்த நிலையில் சில நாட்களிலேயே அவருடைய தந்தை மரணம் அடைந்ததால் குடும்பம் வறுமையில் சிக்கி தவித்தது. ராஜாயி என்ற இயற்பெயர் கொண்ட டி ஆர் ராஜகுமாரியை புகழ்பெற்ற இசை மேதையும் இவரின் பாட்டியும் ஆன குஜாலாம்பாலும் ரங்கநாயகியும் சேர்ந்து சினிமாவில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டினர். எட்டாம் வகுப்பு முடித்த பிறகு தன்னுடைய அத்தை தனலட்சுமி போல நடித்து சம்பாதிக்க வேண்டும் என்று ராஜகுமாரி முடிவு செய்தார். குடும்ப வறுமையை போக்க நடிக்க ஆர்வம் காட்டிய ராஜகுமாரி நடிப்பதற்காக சென்னை சென்றார். முதலில் பல இடங்களில் வாய்ப்பு கேட்டு இறங்கிய இவரை நிராகரித்து விட்டனர்.

பிறகு தனது அத்தை வீட்டில் வீட்டு வேலை செய்து குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். அப்போது இயக்குனர் கே சுப்பிரமணியம் தனலட்சுமி வீட்டிலிருந்த ராஜகுமாரியை பார்த்துவிட்டு கருப்பாக இருந்தாலும் கேமராவிற்கு உன்னுடைய முகம் பொருத்தமாக இருக்கும் அழகாகவும் இருக்கும் என்று கூறி தன்னுடைய படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அப்படி நடித்த படம் தான் குமாரகுலத்துங்கன். இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் போது ராஜாயி என்ற தன்னுடைய பெயரை டி ஆர் ராஜலஷ்மி என மாற்றிக்கொண்டார். இவரின் முதல் படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு கடைசி வரை திரைக்கு வராமல் போனது. பிறகு நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு படம் வெளியாகி தோல்வியை சந்தித்த நிலையில் இதற்கு தன்னுடைய பெயர் மாற்றம் தான் காரணம் என நினைத்துள்ளார்.

அடுத்ததாக இவர் நடித்த திரைப்படத்தில் தன்னுடைய பெயரை டி ஆர் ராஜகுமாரி என மாற்றிக் கொண்டார். இதனால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்கு தன்னுடைய பெயர் மாற்றம் தான் காரணம் என்று நினைத்த அவர் தன்னுடைய பெயரை டி ஆர் ராஜகுமாரி என வைத்துக்கொண்டே அனைத்து திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தையும் பிடித்தார். சினிமாவில் கொடிகட்டி பறந்தது மட்டுமல்லாமல் பல திரையரங்குகளையும் சொந்தமாக வாங்கி படங்களை ஓட்டியுள்ளார். டி ஆர் ராஜகுமாரி தென்னிந்தியாவின் முதல் கவர்ச்சி கன்னி என்னும் பெயருக்கு சொந்தக்காரர் மயக்கும் விழி, வசீகர உடல், இனிய குரல் என சினிமாவுக்கு ஏற்ற அத்தனை திறமையும் அவரிடம் இருந்தது.

மூன்று தீபாவளி கண்ட ஹரிதாஸ் என்ற படத்தில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது. இன்றைய பாண்டி பஜரில் தனது பெயரில் ராஜகுமாரி திரையரங்கை கட்டியவர். இன்று ஒரு பிடி மண் வாங்க கோடிக்கணக்கில் செலவழிக்கும் தி நகரில் முதன் முதலாக பங்களா வகையில் வீட்டை கட்டி அதற்கு கன்னியாகுமரி பவனம் என்று பெயரிட்டவர். தியாகராஜ பாகவதர், பி சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம், எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என ஐந்து நயர்களுடன் இணைந்து நடித்த ஒரே நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரர். எம்ஜிஆர் சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூட்டு கிளி தயாரித்த தயாரிப்பாளர். இப்படி எண்ணற்ற பெருமைகள் கொண்ட இவர் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் ஒரு துறவி போல் வாழ்ந்து 1999 ஆம் ஆண்டு மறைந்தவர்.
