இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் அமைந்திருக்கும் ஒரு அரண்மனை தான் ஹவா மஹால். சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மண்கற்களால் கட்டப்பட்ட இந்த ஜெய்ப்பூர் நகர அரண்மனை பிரம்மாண்டத்தின் உச்சமாகவும் நுண்ணிய வேலைப்பாட்டின் மூலமாக தனித்துவமாக விளங்குகிறது. இதற்கு காற்றின் அரண்மனை என்ற மற்றொரு பெயரும் உண்டு. ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சிறந்த கட்டிடக்கலைகளில் இதுவும் ஒன்றாகும்.

17 ஆம் நூற்றாண்டில் 1799 ஆம் ஆண்டு மகராஜா சவாய் பிரதாப் சிங் இந்த அரண்மனையை கட்டினார். இந்த ஹவா மஹாலில் பல சிறிய ஜன்னல்கள் மற்றும் பால்கனிகள் தேன்கூடு போன்ற தோற்றத்துடன் இருப்பதால் பார்ப்பதற்கே மிகவும் அழகாகவும் கண்ணை கவரும் வகையில் இருக்கிறது. இந்த ஹவா மஹாலை வடிவமைத்தவர் லால் சந்து உஸ்தாத் ஆவார். ஐந்து தளங்கள் கொண்ட இந்த ஹவா மஹாலில் 953 சிறிய ஜன்னல்களுடன் சிக்கலான லேட்டிஸ்டிக் ஒர்க் மூலம் அலங்கரிக்கப்பட்ட தேன்கூடு போன்ற அமைப்பில் வடிவமைத்து இருக்கிறார்.
இந்த ஹவா மஹால் பிரபலமான சுற்றுலா தளமாகும். இது ராஜஸ்தானின் நினைவுச் சின்னமாகவும் கருதப்படுகிறது. இந்த அரண்மனை ஐந்து அடுக்கு பிரமிட வடிவத்தில் இருக்கிறது. சுமார் 50 அடி உயரத்தில் உள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது சிறு சிறு துவாரங்களுடன் தேன்கூடு போன்று இந்த ஹவா மஹால் இருக்கும். ஒவ்வொரு போர்ட்கோலிலும் மினியேச்சர் ஜன்னல்கள் மற்றும் செதுக்கப்பட்ட மலர்கள் ஃபைனல்கள் மற்றும் குவி மாடல்கள் இருக்கின்றன.

இந்த ஹவா மஹால் இந்து ராஜபுத்திர கட்டிடக்கலை மற்றும் இஸ்லாமிய முகலாய கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையின் பிரதிபலிப்பாக இருக்கிறது. ராஜபுத்திர பாணியான குவிமாட விதானங்கள் புல்லாங்குழல் கொண்ட தூண்கள் தாமரை மற்றும் மலர் வடிவங்கள் இஸ்லாமிய பாணியை வெளிப்படுத்தும் விதமாக கல் பதிக்கப்பட்ட ஃபில்கிரி வேலைகள் மற்றும் வளைவுகளை கொண்டு இருப்பது தெளிவாக நம்மால் இதை உணர முடிகிறது. இந்த ஹவா மஹாலின் நுண்ணிய வேலைப்பாடுகள் நம்மை ஆச்சரியமட வைக்கும். இந்த ஹவா மஹால் ராஜஸ்தான் அரசின் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. நீங்கள் ஜெய்ப்பூர் சுற்றுலா செல்லும்போது கட்டாயம் அதை சுற்றி இருக்கும் அரண்மனை எல்லாவற்றையும் சென்று பார்த்து ரசியுங்கள். மேலும் முந்தைய காலத்தில் நம் இந்திய மன்னர்கள் எந்த மாதிரி எல்லாம் கலைகளை வளர்த்திருக்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடியும்.
