தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.
சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அவர் இயக்கத்தில் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தான, சூரி மற்றும் யோகி பாபு என அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர்.
அவரின் இந்த பார்முலாவை அவர் தொடங்கியது கார்த்திக், கவுண்டமணி மற்றும் ரம்பா நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில்தான். அந்த படம் இன்றளவும் அனைத்து வயதினரும் ரசித்துப் பார்க்கும் ஒரு நகைச்சுவை படமாக உள்ளது. இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குனர் சுந்தர் சி, அதை ரி ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாகக் கூறியுள்ளார்.
அதில் “இந்த படத்தின் நெகட்டிவ் உரிமை தயாரிப்பாளர் தேனப்பன் சாரிடம் உள்ளது. அதை ரி ரிலீஸ் செய்யலாம் என பேசிவருகிறோம். கில்லி போன்ற படங்கள் ஓடுவதால் அந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இந்த தலைமுறை நடிகர்கள் அதை திரையில் பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் தனிப்பட்ட முறையில் அந்த படத்தை புதுப்பித்து திரையில் காணவேண்டுமென்ற ஆசை உள்ளது.
ரி ரிலீஸின் போது அந்த படத்தில் நான் செய்த ஒரு தவறையும் சரிசெய்து ரிலீஸ் செய்யவேண்டும். அழகிய லைலா பாடலில் ரம்பா அணிந்திருக்கும் பாவாடை கிழிந்து ஓட்டை விழுந்திருக்கும். அதை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலமாக சரி செய்து ரிலீஸ் செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
