தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார்.
அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம் போன்ற படங்களே அதற்கு உதாரணம். அதே போல அவர் கஷ்டப்பட்டு உருவாக்கிய படங்களில் வெற்றி பெற்ற திரைப்படம்தான் அபூர்வ சகோதரர்கள்.
ஆனாலும் கமல் நடிப்பில் வெளியான படங்களில் 24 படங்கள் வெள்ளி விழா கடந்து 200 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளன. ரஜினியோடு ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தகுந்த சாதனைதான். அந்த படங்கள் எவையென்று பார்க்கலாம். அவர் நடிப்பில் முதல் முதலாக 200 நாட்கள் ஓடிய படம் என்றால் அது பாரதிராஜா இயக்கிய ’16 வயதினிலே’ திரைப்படம்தான். இந்த படம் 285 நாட்கள் ஓடியது.
அதன் பின்னர் அடுத்த ஆண்டு 1978ல் வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது 200 நாள்கள், சிகப்பு ரோஜாக்கள் 200 நாள்கள் ஓடி சாதனைப் படைத்தன. அதன் பின்னர் 80 களில் குரு மற்றும் மூன்றாம் பிறை, தூங்காதே தம்பி தூங்காதே, ஒரு கைதியின் டைரி மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய திரைப்படங்கள் 200 நாட்களைக் கடந்து ஓடின.
அதன்பின்னர் 80 களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், போன்ற படங்களும் 200 நாட்களைக் கடந்து ஓடின. அதன் பின்னர் அவ்வை சண்முகி, இந்தியன் மற்றும் தெனாலி ஆகிய படங்கள் 200 நாட்களைக் கடந்து ஓடின.
2000 களுக்குப் பிறகு ரிலீஸ் முறை மாறியதால் யாருடைய படமும் 100 நாட்கள், 200 நாட்கள் ஓடுவதில்லை. அதனால் கமலின் வேட்டையாடு விளையாடு, விருமாண்டி போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டானாலும் இந்த பட்டியலில் இணையவில்லை.
