தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பலவகையான கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கியவர் ரகுவரன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிய ரகுவரன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஏழாவது மனிதன் திரைப்படம் 80 களில் அதிகமாக வந்த இடதுசாரி கருத்துள்ள திரைப்படங்களில் ஒன்றாகும்.
ஒரு தொழிற்சாலையில் ரகுவரன் எஞ்சினியராக வேலை செய்ய, அந்த தொழிற்சாலையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் மனம் மாறும் ரகுவரன் மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார். இந்த படத்தின் மூலம் ஹீரோவாக ரகுவரனுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனால் அந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெறாததால் ரகுவரனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால்தான் அவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த சிவா, சம்சாரம் அது மின்சாரம், புரியாத புதிர், அஞ்சலி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத்தந்தன. ரஜினியோடு அவர் நடித்த பாட்ஷா திரைப்படம் அவரைப் புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம்.
புகழின் உச்சியில் இருந்த அவர் போதைப் பழக்கங்களுக்கு ஆளானதால் அவரின் உடல்நலம் கெட்டுப் போனது. இதனால் அவரது மனைவி ரோஹினியும் அவரைப் பிரிந்தார். அந்த பழக்கங்களில் இருந்து அவர் விடுபட்டு வந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய போது அவர் மாரடைப்பு வந்து காலமானார். தமிழ் சினிமா ஒரு சிறந்த நடிகரை அவரின் 50 வயதுக்குள்ளாகவே இழந்தது.
