தமிழ் சினிமாவில் 40 களில் இருந்து 70 களின் இறுதிவரை தொடர்ச்சியாக படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் அவற்றை ரிலீஸ் செய்து வெற்றிகொடி நாட்டிய நிறுவனம் ஏவிஎம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஏ வி மெய்யப்ப செட்டியார் இறந்த போது சில ஆண்டுகள் அவர்கள் படம் தயாரிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கி செகண்ட் இன்னிங்ஸிலும் வெற்றி கண்டது. அப்போது ஏவிஎம் நிறுவனம் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரித்தனர். அப்போது மாஸ் ஹீரோக்களுக்கான படங்கள் மட்டும் இல்லாமல், குடும்ப ரசிகர்களுக்கான குடும்பக் கதை கொண்ட படங்களையும் எடுத்தனர்.
அப்படி அவர்கள் தயாரித்த படங்களில் ஒன்றுதான் பாண்டியராஜன், ஊர்வசி மற்றும் மனோரமா நடித்த பாட்டி சொல்லைத் தட்டாதே. இந்த படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கினார். சந்திரபோஸ் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதினார். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமே படத்தில் பாண்டியராஜனுக்கும் மனோரமாவுக்கும் இடையில் நடக்கும் நகைச்சுவைக் கலந்த பாசப்போராட்டமே. அதேபோல க்ளைமேக்ஸ் காட்சியில் படத்தில் இடம்பெற்ற சூப்பர் கார் செய்யும் மேஜிக் விஷயங்கள்தான். இப்படி சூப்பர் ஹிட்டான இந்த படம் அதற்கு முன்பு வந்த ஒரு தோல்விப் படத்தின் கதை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஆம்… பாட்டி சொல்லை தட்டாதே படம், 1959இல் வெளிவந்த படம் மாமியாரை மெச்சின மருமகள் என்ற படத்தின் தழுவலில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தைத் தயாரித்ததும் ஏவிஎம் நிறுவனம்தான். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் அந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்து அதை லேசாக மாற்றி சித்ராலயா கோபு கைவண்ணத்தில் பாட்டி சொல்லைத் தட்டாதே திரைப்படத்தை எடுத்து வெற்றிப்படமாக்கினர் ஏவிஎம் நிறுவனத்தார்.