தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.
அதன் பின்னர் தன்னுடைய மார்க்கெட் போனபோதும், குணச்சித்திர மற்றும் வில்லன் நடிப்புக்கு இறங்கிவந்தார். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு தன்னுடைய மரணம் வரை நடித்தார். கடைசியாக அவர் நடித்த படம் கமல்ஹாசனின் தசாவதாரம் படம்தான்.
இந்நிலையில் தன்னுடைய மார்க்கெட்டை எல்லாம் இழந்து குணச்சித்திர நடிகராக சில படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் அவர் வானொலியில் ஒரு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் “உங்களுக்கு கிடைக்கவேண்டிய புகழ், நல்ல பெயர் எல்லாம் மற்றவர்களுக்கு செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?” எனக் கேட்டுள்ளனர்.
அதற்கு மிகவும் ஆழமாகவும் திர்க்கமாகவும் ஒரு பதிலை அளித்துள்ளார் நாகேஷ். அதில் “ஒரு கட்டிடம் கட்டும்போது சவுக்கு மரத்தை வெட்டி கட்டைகளாக்கி சாரம் கட்டி அதன் மேல் உட்கார்ந்துதான் அதற்கு பூச்சு பூசுவார்கள், பெயிண்ட் அடிப்பார்கள், அலங்கார வேலைகள் செய்வார்கள். ஆனால் கட்டட வேலை முடிந்ததும் சவுக்குக் கட்டைகளை தூக்கி யாரும் பார்க்காத மறைவான இடத்தில் போட்டுவிட்டு எங்கோ வளர்ந்த வாழை மரத்தைக் கொண்டுவந்து எல்லோரும் பார்க்கும் படியாகக் கட்டுவார்கள்.
ஆனால் அந்த வாழை மரத்தின் ஆயுள் மூன்றுநாள்தான். ஆனால் சவுக்கு மரமோ மீண்டும் எதாவது வேலை செய்யவேண்டுமென்றால் தயாராக இருக்கும். நான் வாழை இல்லை… சவுக்கு” எனக் கூறியுள்ளார்.
