தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
தமிழ் சினிமாவில் இருபெரும் நட்சத்திரங்களாக உருவாகிவந்த ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரின் படங்களின் வெற்றிக்கும் இளையராஜாவின் பங்கு அளப்பறியது. அவரது பாடல்கள் அனைத்துவிதமான ரசிகர்களிடமும் ரஜினி, கமலை கொண்டு சென்றது.
ஆனால் வள்ளி படத்துக்கு பிறகு ரஜினி படத்துக்கு இளையராஜா இசையமைப்பது நின்றது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் அதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் மன்னன் படத்துக்கு இளையராஜா இசையமைக்கும் போது அந்த படத்தில் இடம்பெற்ற “அம்மா என்றழைக்காத” பாடலை உருவாக்கியுள்ளார்.
அந்த பாடலைக் கேட்ட ரஜினி “பாடல் மிக மெதுவாக இருக்கிறது. ரசிகர்களுக்கு பிடிக்குமா என்று கேட்டுள்ளார். இதை இயக்குனரும் இளையராஜாவிடம் சொல்லியுள்ளார். அதற்கு இளையராஜா “இந்த பாடல் ஹிட்டாகவில்லை என்றால் ஆர்மோனியத்தில் கைவைப்பதையே நிறுத்தி விடுகிறேன்” என உறுதியாக கூறியுள்ளார்.
இளையராஜா இவ்வளவு நம்பிக்கையோடு பேசுவதைக் கேட்டபிறகு ரஜினி அந்த பாடலில் நடித்துள்ளார். இளையராஜா சொன்னது போலவே அந்த பாடலும் ஹிட்டாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் 30 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடலாக உள்ளது.
